திங்கள், 26 செப்டம்பர், 2011

என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்!?

நாள் 1

இன்று காலை வழக்கமாக செய்தித்தாள் வாங்கும் கடையில் (தம் அடிக்கும் கடையில்) நண்பனை சந்தித்தேன். செப்டெம்பரிலும் கொழுத்தும் சென்னை வெய்யிலில் கோட் மாட்டிக்கொண்டு நின்றிருந்தான். 

"என்னடா இந்த வெய்யில்ல கோட் எல்லாம்?"

 என்றால் சலித்து கொண்டே பதில் சொன்னான்.

"என்னடா பண்றது? இன்னைக்கு Client meeting. London ல இருந்து clients எல்லாம் வர்றாங்க. Fully formal ன்னு சொல்லிட்டாங்க. சரி. நான் கெளம்புறேன். ஒரே புழுக்கமா இருக்கு. AC குள்ள போனாதான் கொஞ்சம் நிம்மதியா இருக்கும்."

என்று வாகனத்தை உதைத்து கிளப்பினான்.

நாள் 2

போன வாரம் ஒரு பெரிய வேலையை நேரத்தில் முடித்து கொடுத்தோம். அதை பாராட்ட எங்கள் நிறுவன உயர் அதிகாரி 

"விருந்து வைக்கிறேன். எங்கே போகலாம்?"

 என்று கேட்க, 

இருக்கும் 10 பேரில் 9 பேர் "KFC" என்றனர். நானும் போக வேண்டியதாயிற்று. அது என்ன KFC மோகமோ தெரியவில்லை. அவர்கள் கொடுக்கும் Chicken அவ்வளவு சுவை; அலாதியாக இருக்கிறது என்றெல்லாம் சொல்ல முடியாது. வெந்த கோழியை சோ மாவு பூசி வறுத்து  கொடுக்கிறார்கள். உப்பு சப்பு ஒன்றும் கிடையாது. அந்த சிறிய Ketchup packet-கள் இல்லை என்றல் அதை சாப்பிடவே முடியாது. இதற்க்கு நூற்று கணக்கில் விலை.

அதே நாள், அதே நேரம்

பட்டியல் பார்த்து, என்ன சாப்பிடுவது என்று குழம்பி கொண்டிருந்தார்கள். நான் போய் 

"அந்த "Meal box"ல் என்ன என்ன இருக்கும்?"

 என்று கடை சிப்பந்தியை கேட்டேன். தமிழில் தான் கேட்டேன். அவன் சொன்னது,

"You'll get a normal burger with french fries and a soft drink sir. You may opt for two hot wings instead of french fries sir".
பார்பதற்கு தமிழன் போல தான் இருந்தான். அப்பொழுது ஒன்றும் அவனை கேட்கவில்லை. எல்லாம் சாப்பிட்டு முடிந்து வெளியே போகும் பொது அவனிடம் கேட்டேன். 

"ஏன் நீங்கள் தமிழில் பேசாமல் ஆங்கிலம் பேசுகிறீர்கள்?" என்று. அதற்கும் ஆங்கிலத்தில் தான் பதில் சொன்னான்.

"Company policy sir".
என்ன கொடும சார்?

இரண்டு நாட்களில் மூன்று வெவ்வேறு அடிமைத்தன செயல்களை பார்க்க முடிகிறது. இன்னும் இதை போன்று எத்தனயோ அடிமை செயல்களை நாம் செய்து கொண்டு தான் இருகின்றோம். வருடத்தில் 10௦ மாதங்கள் வெப்பமாக இருக்கும் நம் சென்னை போன்ற ஊர்களில் கோட் அணிவது தேவைதானா? குளிர் பிரதேசங்களில் இருந்து வருபவர்களே இங்கு வந்த பின் நம் வெப்ப நிலைக்கு ஏற்றர்போல் உடை அணிகிறார்கள். அனால் நம் ஊரில் செருப்பு அணிந்து சென்றால் பல ஹோல்டேல்களில் உள்ளேயே விடுவதில்லை. ஒரு வேளை என் தோலும் வெள்ளை நிறமாக இருந்து, தலையும் தங்க நிறத்தில் இருந்தால் நான் ஜட்டி மட்டும் அணிந்து சென்றாலும், குனிந்து சலாம் வைத்து உள்ளே அனுப்புவார்களோ?

என் சொந்த ஊரில், என் முன்னோர்கள் காலம் காலமாக அணிந்த காலணிகளை போன்று நான் அணிந்தால், என் சொந்த ஊரிலேயே, எனக்கு அனுமதி இல்லை என்கிறான் வேறு எங்கோ இருந்து இங்கு வந்து வர்த்தகம் செய்யும் ஹோட்டல் காரன். இப்படித்தான் வெள்ளையனும் உள்ளே புகுந்தான், நம்மை 300௦ ஆண்டுகாலம் ஆட்சி செய்தான் என்பதை எவ்வளவு சுலபமாக மறந்து விட்டோம்?

வேற்று நாட்டவன் இங்கே வந்து ஒரு அரசாங்கம் அமைத்து, பஞ்சாயத்து செய்தல் தான் அவன் நம்மை ஆள்கிறான் என்று இல்லை. இப்போதும் மறைமுகமாக, ஏன், நேரடியாகவே நம்மை ஆண்டு கொண்டுதான் இருக்கிறான். இப்பொழுதும் நம் பொருளாதாரம் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளை நம்பி தானே இருக்கின்றது? அமெரிக்க வங்கி தன்
 விருபத்திற்கு கடன் வழங்கி உருவான அமெரிக்க பொருளாதார வீழ்ச்சியில், நம் நாட்டில் எத்தனை வேலைகள் போயின? எத்தனை பேர் தற்கொலை செய்து கொண்டார்கள்? RBS போன்ற வங்கிகள் தங்கள் outsourcing வேலைகளை நிறுத்தி கொண்டதில் இங்கு எத்தனை வீடுகளில் அடுப்பு அணைந்தது? இது நடந்து இன்னும் 2 வருடங்கள் கூட முடியவில்லை. இதையும் மறந்து விட்டு, மீண்டும் அவனிடமிருந்து வந்த வேலைகளையே செய்து கொண்டிருக்கிறோம். இதோ, மீண்டும் ஒரு "பொருளாதார மந்த நிலை வரும் என்று எதிர் பார்க்க படுகிறது" என்று, வானிலை அறிக்கை போல் சொல்கிறார்கள். மீண்டும் வேலைகள் போக போகின்றன. என்ன செய்ய போகிறோம்? தங்கள் சுய பொருட்களையே (products) தயாரித்த, உள்நாட்டு வேலைகளையே (internal projects and domestic projects) பார்த்த எங்களை போல எத்தனையோ சிறு, பெரு நிறுவனங்கள் யாரையும் வேலை இல்லை என்று வெளியில் அனுப்ப வில்லையே? சிந்திப்போம்.

இந்த IT revolution எனப்படும் தகவல் புரட்சி நடந்து வரும் சென்ற 10-15 ஆண்டுகளில் நம் சொந்த தயாரிப்பு, இந்திய தயாரிப்பு என்று நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் எத்தனை பொருட்கள் இருக்கிறது? விரல் விட்டு கூட எண்ண முடியாது. ஏன்? அப்படி எதுவும் இல்லை என்பதால்தான்.

அன்றாட வாழ்வில், தமிழிலிலேயே பேச வேண்டும் என்று நான் ஒரு நாள் முடிவெடுத்து, நாம் அன்றாடம் புழங்கும் சில ஆங்கில வார்த்தைகளுக்கு தமிழ் சொல் தேடியபோது ஒரு உண்மையை காண முடிந்தது. பெரும்பாலான கலை சொற்கள், ஆங்கிலத்தில் இருந்து அப்படியே மொழிமாற்றம் செய்யப்பட்ட சொற்றொடர்களே. இவை சொற்கள் அல்ல. சொற்றொடர்கள் (phrases). நாம் எதையாவது கண்டு பிடித்திருந்தால், உருவாக்கியிருந்தால், அதற்க்கு ஒரு சொல்லையும் உருவாக்கியிருப்போம். மொழி மாற்றம் செய்து கொண்டு இருக்க மாட்டோம்.

சென்ற இரண்டு தலைமுறையும் B.Sc. Botany படித்து விட்டு, வங்கியில் நோட்டு எண்ணினார்கள். இன்று ஜகந்நாதன் B.E. Mechanical படித்து விட்டு, "Hi. This is John speaking. Thank you for calling. How may I help you sir?" என்கிறான்.

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?!
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?!
என்று முண்டாசுக்கவி கேட்டதற்கு நமக்கு இன்னும் விடை தெரியவில்லை. நம் அடுத்த தலைமுறையையாவது இதை போன்று அடிமை மோகத்திலிருந்து காப்பாற்றுவோம். 

செவ்வாய், 5 ஏப்ரல், 2011

உதைக்கும் ஓட்டு லாஜிக்...

அன்புள்ள ஓட்டு போடும் எந்திரங்களுக்கு..
சக எந்திரம் எழுதுவது....

நானும் குஜராத்தில் இலவசம் இல்லை, TASMAC இல்லை போன்றவற்றை பட்டியலிடும் மின்-அஞ்சலை படித்தேன்...

சரி, இலவசம் இலவசம் என்று மக்களை சோம்பேறிகளாக மாற்றி வைத்திருக்கும் அரசு வேண்டாம்; TASMAC திறந்து வைத்து, குடிமக்களை குடிகாரர்களாக மாற்றி வைத்திருக்கும் அரசு வேண்டாம் என்றெல்லாம் எண்ணி, இந்த தேர்தலில் ஓட்டு போட நினைத்திருந்தேன்.

ஆனால், நம் தமிழக அரசியல் காட்சிகள் அது முடியாது என்று சாட்டையால் அதித்த்தைப்போல் உணர வைத்திருக்கிறார்கள். நாமெல்லாம் வெறும் எந்திரங்கள் தாம். நமக்கு சிந்தனையெல்லாம் கூடாது. அது சினிமாவில் மட்டும் தான் நடக்கும் என்கிறார்கள்.

இந்த குஜராத் மின் அஞ்சலை படித்த நான், திமுக, அதிமுக ஆட்சிக்கு வந்தால் என்னென்ன இலவசம் என்று போட்டி போட்டு பட்டியலிடும் அஞ்சலையும் படித்தேன்.

TASMAC திறந்து வைத்தது அதிமுக. இலவசம் கொடுத்தது திமுக. இப்போ களத்தில் இருப்பது இந்த இரண்டு கட்சிகள் தான். இப்போ எந்திரமான எனக்கு லாஜிக் உதைக்கிறது.

குஜராத் அஞ்சல் லாஜிக் படி பார்த்தால் எந்த காட்சிக்கும் ஓட்டு போட முடியாது. இலவச பட்டியல் அஞ்சல் படி பார்த்தாலும் இலவசங்கள் இல்லாத கட்சிக்கு தான் ஓட்டு போட வேண்டும் என்கிறது லாஜிக். இளைய எந்திரங்கள் நம்பிக்கை வைத்திருந்த விஜயகாந்தும் அதிமுகவில் போய் கலந்து விட்டார். இப்போ என்ன செய்வது?

ஒரு if, else if இருந்தால், ஒரு else இருக்க வேண்டும் இல்லையா? அந்த else தான் 49-ஓ. ஆனாலும் ஓட்டு வீணாக கூடாது என்கிறது லாஜிக். மீண்டும் உதைக்கிறது. சக எந்திரங்கள் புதிய லாஜிக் ஏதும் வைத்திருந்தால் உடனடியாக மின்-அஞ்சல் செய்யவும். நானும் என் லாஜிக்கை Upgrade செய்து கொள்கிறேன்.

வியாழன், 9 டிசம்பர், 2010

Twitter தூக்கம்

9.30 மணி..

நல்ல அசதி.. செம வேலை இன்னிக்கு. நல்லா தூங்கணும் பா. Tiffin ஆச்சு

10.00 மணி..

சாப்புட்டாச்சு.. கொஞ்ச நேரம் relax பண்ணலாம்... ஒரு படம் பாப்போம்..
சே... Hard disk-ல இருக்குற முன்நூத்தி சொச்சம் படத்தையும், 30-30 தடவ பாதாச்சு... புதுசா ஒண்ணும் இல்ல...


10.20

சரி.. Games.. எல்லா Games-யும் ரெண்டு ரெண்டு தடவ முழுசா முடிச்சு, அதுல Cheat Code போட்டு அதையும் விளையாடியாச்சு... Bore...

11.00

ரேடியோ!!!!

வா வெண்ணிலா..
பழைய நினைவுகள்...
சே.. இவனுங்க வேற.. நம்ம நெலம தெரியாம....

Channel Change...

மணியே மணி குயிலே.... அட என்ன கொடும ஸார் இது...

11.30

ரேடியோ கட்..

என்ன அச்சு? ஒரு SMS...

ஏன் காதல் பாட்டு புடிக்கலையோ, அங்க இருந்து...
அடப்பாவிகளா... ஒரு முடிவோடத்தான் இருக்கீங்களா?


3.00 மணி..

இன்னும் தூங்கல...

புதன், 20 ஜனவரி, 2010

மொரீஷியஸ் – தமிழ் புத்தாண்டு 2009

மொரீஷியஸ் பற்றி எழுதி வெகு நாட்கள் ஆகி விட்டன. அது ஏன்... ஏழுதியே வெகு நாட்கள் ஆகி விட்டன. இன்று நாளை என்று எழுதாமல் தள்ளிபோட்டுக்கொண்டே வந்த விஷயம் (சோம்பேறி தனம் தான்!).

பொதுவாக மொரீஷியஸில் தமிழ் என்பது அந்த ஊர் ரூபாய் தாள்களிலும் (அந்த ஊரிலும் ரூபாய் (Rupee) தான்), கோவில்களிலும் மட்டுமே காண கிடைக்கும். மூண்றாம் தலைமுறை தமிழ் வம்சாவழியினர் இங்கு வாழ்கின்றண்ர். இவர்கள் சுத்தமாக தமிழை மரந்து விட்டனர். ஆனால் தமிழர் பண்டிகைகள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

சென்ற வருட (2009) தமிழ் புத்தாண்டிற்கு நான் மொரீஷியஸில் இருக்க நேர்ந்தது. அதே நாளில் வேறு ஒரு கிருத்துவ விசேஷமும் சேர்ந்து வர, நாடு முழுவதும் விடுமுறை. தெலுங்கு புத்தாண்டிற்கு விடுமுறை விட்டார்கள். தமிழுக்கு ஏன் விடுமுறை இல்லை என்று கேட்டதற்கு, அடுத்த வருடம் விடுவார்கள் என்றார்கள்.ஒரு வருடம் தமிழுக்கு மறு வருடம் தெலுங்கிற்காம். தொலைக்காட்சியில் தமிழ் தெலுங்கு படங்களும் இப்படித்தான் ஒளிபரப்பாகும். ஒரு திங்கட்கிழமை அன்று தமிழ் படம், மறு வாரம் தெலுங்கு படம் என்று. ஆனால் வாரம் முழுவதும் ஏதாவது ஒரு பழைய தமிழ் மெகா தொடர்களை ஒளிபரப்புவார்கள்.

ஏப்ரில் 14 விடுமுறை என்பதால் முந்தினமே வாங்கி வந்த Bottle உடன் தொலைக்காட்சி முன்பு அமர்ந்தேன். (ஹி... ஹி... வேற என்ன வேல?) மொரீஷியஸில் இருக்கும் பல்வேறு தமிழ் அமைப்புகள் நடத்திய விழாக்களை நேரடி ஒளிபரப்பினார்கள். இத்தனை தமிழ் அமைப்புகள் இருப்பது அன்றுதான் தெரியும்.

மொரீஷியஸ் தமிழ் பண்பாட்டு மைய்யம்,
மொரீஷியஸ் தமிழ் கோவில்கள் கூட்டமைப்பு,
ரோஸ் ஹில் தமிழ் பண்பாட்டு மைய்யம்,
பீணிக்ஸ் தமிழ் மன்றம்,
காட் போன் (Quatre Borne) Marimen கோவில் தமிழ் சங்கம் (மாரியம்மன் கோவில் என்பது பிறகு தெரிந்தது),

போன்று ஏகப்பட்ட அமைப்புகள். இதில் பல அமைப்புகள் அவர் அவர் ஏரியாவில் விழா நடத்தினர். மொரீஷியஸ் தமிழ் பண்பாட்டு மைய்யம் மற்றும் மொரீஷியஸ் தமிழ் கோவில்கள் கூட்டமைப்பு இணைந்து நடத்தியதுதான் பிரதான விழா. மொரீஷியஸ் பிரதம மந்திரி டாக்டர். நவீன்சந்திர ராம்குலாம் வந்து சிறப்பித்தார்.

இந்த விழா தொடங்கியது தமிழ் தாய் வாழ்த்துடன். மிக பெருமையாக இருந்தது. நிகழ்சியை தொகுத்து வழங்கிய பெண்மணி பிரதம மந்திரியை குத்து விளக்கு ஏற்ற அழைத்தது இப்படித்தான். "இப்போது மாண்புமிகு பிரதம மந்திரி டாக்டர். நவீன்சந்திர ராம்குலாம் குத்து விளக்கை ஏற்ற போவார்!". எல்லோரையும் இப்படித்தான் அழைத்தார். மற்றபடி மிக அழகான உச்சரிப்பு. பிரதமர் குத்து விளக்கேற்றி, தமிழின் பெருமையையும், தமிழர்கள் மொரீஷியஸ் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பை பற்றி ஃப்ரென்ச்சில் விரிவாக பேசினார். இலங்கையில் நடக்கும் யுத்தம் குறித்து வருத்தம் தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கம் போல் பள்ளி மாணவ மானவியருக்கு பரிசுகள் வழங்கினார். இதுவும் முடிந்தபின், கலை நிகழ்ச்சிகள் தொடங்கின. அனைவரும் மிக நன்றாக செய்தார்கள். அஜிதா என்ற பெண் "முன்பே வா, என் அன்பே வா" என்று மிக அழகாக, சுத்தமான உச்சரிப்புடன் பாடினார்.

வீணை, வயலின், மிருதங்கம், கஞ்சிரா, தபலா, ஆர்மோனியம் சகிதமாக, தாவணி அணிந்த அழகான பெண்கள் சுற்றி இருக்க, "தண்டபாணி தேசிகர்" என்பவர் நடுநாயகமாக அமர்ந்து chorus-ஆக கச்சேரி செய்தார். தமிழில் தான் பாடினார். பாடல் நினைவில்லை. பெயரை போல் இல்லாமல் கொஞ்சம் இளமையாகவே இருந்தார். மகாத்மா காந்தி கல்வி மைய்யம் என்று பெயர் போட்டார்கள்.

வெவ்வேறு இடங்களில் நடந்த நிகழ்ச்சிகளின் தொகுப்பு, மாலை ஒளிபரப்பப்பட்டது. அதில் ஒரு பெண் "அலகா உன் அலகை அலகான தமிலில் அலகாக நான் பாடவா" என்று பாடினார். முருகன் மீதான பாடல் போலிருக்கிறது. முருகன் கேட்டிருந்தால் பதரிப்போய் "பாடாதே! வேண்டாம்!" என்று மென்னியை பிடித்திருப்பார். அவர் பக்கத்தில் பொம்மை போல் மொழுக் என்று அமர்ந்திருந்த சைனீஸ் குழந்தை தலையாட்டி ரசித்தது.

"ஸ்னேகிதி ஸ்னேகிதி" என்று பழைய தமிழ் மெகா தொடர் பாடலுக்கு பத்து தாவனிப்பெண்கள் நடனமாடினார்கள். (இந்த தொடர் அங்கு இப்போது ஒளிபரப்பாகிரது). தொட்டால் உடைந்து விடுவார் போல இருந்த பெண் நன்றாக ஆடினார். நன்றாக சிரித்தார்.

தமிழ் நாட்டுப்புற இசை என்று சொல்லி "அப்பா அம்மா விளையாட்டை விளையாடி பாப்போமா" போன்ற குத்து பாடல்களுக்கு நடனம் ஆடினார்கள். (தமிழ் கலாச்சாரம் மற்றும் அதன் கலை வடிவங்களுக்கு தமிழ் சினிமாவால் எப்பேர்ப்பட்ட மோசமான சேதம் ஏற்பட்டுள்ளது என்று நினைக்கும் போது நெஞ்சு பதைபதைக்கின்றது)

இவ்வாறு மொரீஷியஸில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் இனிதே நிறைவு பெற்றது.

வெள்ளி, 11 டிசம்பர், 2009

மகாகவியின் பிறந்த தினம்

இன்று பாரதியின் பிறந்தநாள். இன்றைய தினத்தை (பாரதியின் பிறந்த நாளை) நினைவு கொள்வதற்காகவேணும் ஒரு பதிவு வேண்டும் என்று இதை இங்கு பதிகிறேன்.

நாளை வரும் ரஜினி-யின் பிறந்த நாளை, சென்ற வாரத்தில் இருந்தே சுவரொட்டிகள் ஒட்டி கொண்டாட தொடங்கிய தமிழ் மக்களுக்கு, மகாகவியின் பிறந்ததினம் மறந்து போனது. தொலைகாட்சி, வானொலி போன்ற எந்த ஊடகத்திற்கும் நினைவு வரவில்லை. ஒரு சில விதி விலக்குகள் தவிற...

நெஞ்சு பொருக்குதில்லையே..
இந்த நிலைகெட்ட மாந்தரை நினைத்துவிட்டால்..

அவர் சொன்ன கருத்துகளை இன்றைகேனும் நினைவு கொள்வோம்.

ஞாயிறு, 25 அக்டோபர், 2009

ஒரு பதிவு

வெகு நாட்களாக எழுத வில்லை. பதிவு போட சாரங்கலள் ஏகபோகமாக இருந்தும், ஒரு சோம்பேரி தனம். நேரமின்மை என்று சொல்வது சரியல்ல. பொய்யாகும்.

இந்த வலைபதிவை துவக்கும்முன் தமிழ் பதிவுலகம் எப்படி இருந்தது என்று நான் கவனிக்கவில்லை. அறிய முனையவும் இல்லை. ஆனால் இந்த இடைவெளியில் ஒரு சிறிய அறிமுகம் ஏற்பட்டது.

பெரும்பாலும் அரசியல், சினிமா மற்றும் ஈழம் பற்றியே உள்ளன. இதில் பதிவர்கள் இடையில் நடக்கும் மோதல்கள், அடிதடி ரகளைகள்..

சில நல்ல பதிவுகளும் சிக்கின. சிறுகதைகள், கவிதைகள், பயண கட்டுரைகள் என்று. இபபோது தொடுப்புகள் கொடுக்க் முடியவில்லை. வேறு ஒரு சந்தர்பத்தில் தருகிறேன்.

செவ்வாய், 23 ஜூன், 2009

சாரி

“டேய். பொறுக்கி நாயே!”

“என்னங்க? யாருங்க?”

“நீயெல்லாம் அக்கா தங்கச்சியோட பொறக்கல?”

“என்னம்மா? என்ன பிரச்சன?”

“உன்னையெல்லாம் நடுத்தெருவுல நிக்க வச்சி செருப்பால அடிக்கணும்”

“டேய் அட்ரா அவன… புட்ரா”

“இருங்க! இருங்க!! ஏங்க என்னன்னு சொல்லுங்க? யோவ்! மேல கை வைக்காத!!”

“யே! இருங்கப்பா. யோவ்! இருய்யா. அவன அடிக்காத. பாவம். ஏம்மா! உன்மேல கை வச்சவன் அதோ இறங்கி ஓடுறான் பாரு”

“யோவ்! என்னய்யா கண்டக்டர் நீ? ஓடுறான் பாத்துக்கிட்டே இருக்க?”

“ஆமாயா… உங்களோட மல்லு கட்டூரத்தே பெரிய வேல. இதுல இது வேறயா?”

“சாரி.. ப்லீஸ் சாரி சாரி. அய்யோ… நீங்கன்ணு தப்பா நெனச்சிட்டேன்..”
“வெரி சாரி. சாரி சாரி… ப்லீஸ் மன்னிச்சுடுங்க…”

ஒருபுறமாய் தலை சாய்த்து
இரு விழிகளும் மன்றாட
முகம் வேளிறி, வேர்த்து கொட்ட
உண்மையாக, உணர்ந்து மன்னிப்பு கேட்கிறாய்.

நீ இவ்வளவு அழகாய் “சாரி” சொல்வதானால்
நான் இன்னொரு முறை அடி வாங்க தயார்.
உதடு கிழிந்த குருதியை உன் கைக்குட்டையால்
துடைத்து விடும்போது “ஸ்ஸ்ஸ்ஸ்” என்று
பொய் வலி காட்டினால்,
நீயும் “ஸ்ஸ்ஸ்ஸ்” என்று மேலும் இருமுறை
“சாரி சாரி…”

நீ என் நெஞ்சில் குத்தி விட்டு
இதே போல் அழகாய் மன்னிப்பு கேட்டால்
சத்தியமாய் மன்னித்து விடிவேன்
ஒரு வேளை மன்னிக்காமல் இருந்தால்
நிச்சயம் இறந்திருப்பேன்